zoomText
  • A
  • A
  • A

மரியாவின் களங்கமில்லா திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு

 

AM  - AR  - BE  - BG  - CS  - DA  - DE  - EN  - ES  - FA  - FI  - FR  - HI  - HR  - HU  - HY  - IT  - JA  - KO  - LT  - LV  - ML  - NO  - PL  - PT  - RO  - RU  - SK  - SL  - SQ  - SV  - SW  - TA  - TI  - UK  - VI  - ZH_TW

ஓ மரியே, இறைவனின் அன்னையும், எம் அன்னையுமானவரே, இக்கொடுந்துன்ப நேரத்தில், நாங்கள் உம்மை நாடிவருகிறோம். நீர் எம் அன்னை. நீர் எம்மை அன்புகூர்கிறீர், எம்மை அறிந்திருக்கிறீர். நாங்கள் எங்கள் இதயத்தில் மறைத்து வைத்திருப்பது எதுவும் உமக்கு மறைவாயில்லை. இரக்கத்தின் அன்னையே, பல நேரங்களில் நாங்கள் உமது கனிவுள்ள பராமரிப்பை அனுபவித்துள்ளோம். உமது பிரசன்னம் எமக்கு அமைதியைக் கொணர்கின்றது. ஏனெனில் நீர் எப்போதும் எம்மை அமைதியின் இளவரசராம் இயேசுவிடம் வழிநடத்திச் செல்கின்றீர்.

ஆயினும் நாங்கள் அமைதியின் பாதையை இழந்து நிற்கிறோம். கடந்த நூற்றாண்டின் கொடுந்துயரங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை, உலகப் போர்களில் உயிரிழந்த இலட்சக்கணக்கான மக்களின் தியாகத்தை நாங்கள் மறந்துவிட்டோம். நாடுகளின் ஒரே குழுமமாக நாங்கள் மேற்கொண்ட அர்ப்பணங்களை புறக்கணித்துவிட்டோம். மக்களின் அமைதிக்கான கனவுகள், மற்றும், இளையோரின் நம்பிக்கைகளுக்குத் துரோகம் செய்துவருகிறோம். பேராசையால் நோயாளிகளாக மாறிவிட்டோம். தேசிய நலன்களுக்குள் எம்மை முடக்கிவைத்துள்ளோம். புறக்கணிப்பு மற்றும், தன்னலத்தால் முடங்கிக்கிடக்க எம்மையே அனுமதித்துள்ளோம். எம் அயலவர், மற்றும், பொதுவான இல்லமாகிய இப்பூமியின் பாதுகாவலர்கள் என்பதை மறந்து, கடவுளை மறக்கவும், எம் தவறுகளோடு வாழவும், பகைமையைப் பேணிவளர்க்கவும், மனித வாழ்வை அழிக்கவும் ஆயுதங்களைச் சேமிக்கவும் நாங்கள் விரும்புகிறோம். இப்பூமியின் தோட்டத்தை போரால் நாசமாக்குகிறோம். சகோதரர், சகோதரிகளாக வாழவேண்டும் என்று விரும்புகின்ற இறைத்தந்தையின் இதயத்தைப் பாவத்தால் காயப்படுத்தியுள்ளோம். ஒவ்வொருவரும் தன்னைத் தவிர மற்ற எல்லாரையும் புறக்கணிப்பவர்களாக மாறிவிட்டோம். ஆண்டவரே, எம்மை மன்னித்தருளும்! என வெட்கத்தோடு கூறுகிறோம்.

பாவத்தின் துயரில், எம் சோர்வு மற்றும் பலவீனத்தில், தீமை மற்றும் போர்க் கொடுமையின் புதிரான நிலையில், கடவுள் எம்மைக் கைவிடவில்லை, அவர் எம்மை தொடர்ந்து அன்போடு நோக்குகிறார், எம்மை மன்னிக்கவும் எம்மைத் தூக்கிவிடவும் ஆவலாக இருக்கிறார் என்பதை, புனித அன்னையே நீர் எமக்கு நினைவூட்டும். அன்னையே, கடவுளே உம்மை எமக்கு அளித்தார். திருஅவை மற்றும், மனித சமுதாயத்தின் புகலிடமாக உமது அமல இதயத்தில் எம்மை அவர் வைத்தார். உமது விண்ணக நன்மைத்தனத்தில் நீர் எம்மோடு இருக்கின்றீர். வரலாற்றின் வேதனையோடு உம்மிடம் வரும்போதுகூட நீர் எம்மை உம் கனிவன்பால் வழிநடத்துகிறீர். 

எனவே அன்னையே, உம்மை நோக்கி மன்றாடுகிறோம். எமக்காக உம் இதயக் கதவைத் தட்டுகிறோம். உம் அன்புப் பிள்ளைகளாகிய நாங்கள், எல்லா நேரங்களிலும் உம்மைச் சந்திப்பதற்கு ஒருபோதும் சோர்வடைவதில்லை. இருளான இந்நேரத்தில் எமக்கு உதவிசெய்தருளும், எமக்கு ஆறுதலளித்தருளும். நான் உங்கள் அன்னை அல்லவா, நான் இங்கே இருக்கவில்லையா என, எம் ஒவ்வொருவரிடமும் கூறும். எம் இதயங்களின் சிக்கல்கள் மற்றும், எம் காலத்தின் முடிச்சுகளை அவிழ்த்துவிடுவது எவ்வாறு என்பது உமக்குத் தெரியும். அன்னையே நீர், குறிப்பாக இச்சோதனை காலத்தில் எம் வேண்டுதல்களைப் புறக்கணிக்கமாட்டீர், எமக்கு உதவிபுரிய வருவீர் என்பதில் நாங்கள் உறுதியாய் இருக்கிறோம்.    

கலிலேயாவின் கானாவில் இயேசுவின் தலையீட்டுக்காக விரைந்து செயலாற்றி, அவர் உலகிற்கு முதல் புதுமையை ஆற்றச் செய்தீர். திருமண விழா சோகமாக மாறியபோது, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” (யோவா.2:3)  என்று நீர் அவரிடம் கூறினீர். ஓ அன்னையே, அதையே மீண்டும் இறைவனிடம் கூறும். ஏனெனில், இன்று நாங்கள் நம்பிக்கை என்ற திராட்சை இரசம் இல்லாமல் இருக்கின்றோம். மகிழ்ச்சி மறைந்துவிட்டது. வன்முறைகள் மற்றும் அழிவை நடத்த திறமையுள்ளவர்களாக மாறிவிட்டோம். உமது அன்னைக்குரிய தலையீடு எமக்கு அவசரமாகத் தேவைப்படுகின்றது. 

ஓ அன்னையே, எம் மன்றாட்டுக்களை ஏற்றருளும்.

கடலின் விண்மீனே, போர் என்ற புயலின் சேதங்களுக்கு அனுமதிக்காதேயும்.

புதிய உடன்படிக்கைப் பேழையே, ஒப்புரவுத் திட்டங்கள் மற்றும் பாதைகளை எம்மில் தூண்டியருளும்

விண்ணகத்தின் மண்ணகமே, கடவுளின் உடன்படிக்கையை உலகிற்குக் கொணரும் 

பகைமைத் தீயை அணைத்தருளும். பழிவாங்குதலைத் தணித்தருளும், மன்னிப்பைக் கற்றுத்தாரும்

போரிலிருந்து எம்மை விடுவித்தருளும், அணு ஆயுத அச்சுறுத்தலிலிருந்து உலகைக் காப்பாற்றும்.

செபமாலையின் அரசியே, செபிக்கவும் அன்புகூரவும் உள்ள தேவையை எம்மில் தட்டியெழுப்பியருளும்

மனிதக் குடும்பத்தின் அரசியே, உடன்பிறந்த உணர்வுநிலையின் பாதையை மக்களுக்குக் காட்டியருளும். 

அமைதியின் அரசியே, உலகுக்கு அமைதியைப் பெற்றுத்தாரும்.

ஓ அன்னையே, உம் கண்ணீர்கள், எம் கடின இதயங்களை இளகச்செய்யும். நீர் எமக்காகச் சிந்திய கண்ணீர்கள், எம் பகைமையால் வறண்டுபோயுள்ள இத்துன்ப பள்ளத்தாக்கை மலரச்செய்வனவாக. ஆயுதங்களின் சப்தம் அடங்காதவேளை, உம் செபம் அவற்றை அமைதிப்படுத்தும். குண்டுகளின் தாக்குதலால் துன்புறும் மற்றும், இடங்களைவிட்டு வெளியேறும் மக்களை, உம் தாய்மைக்குரிய கரங்களால் அரவணைத்தருளும். உம் தாய்க்குரிய அரவணைப்பு, தங்கள் வீடுகள் மற்றும் நாட்டைவிட்டு கட்டாயமாக வெளியேறும் மக்களுக்கு ஆறுதலாயிருப்பதாக. உமது துயர் நிறைந்த இதயம், காயமடைந்தவர்கள் மற்றும், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களைப் பராமரிக்கவும், அவர்களுக்குக் கதவுகளைத் திறந்துவிடவும் நாங்கள் பரிவன்புடன் இருக்கச் செய்வதாக.

இறைவனின் புனித அன்னையே, நீர் சிலுவையடியில் நின்றபோது, உமக்கு அருகில் நின்ற சீடரைப் பார்த்து, இயேசு உம்மிடம் “அம்மா, இவரே உம் மகன்” (யோவா.19:26) என்றார். அவ்வாறு அவர் எம் ஒவ்வொருவரையும் உம்மிடம் ஒப்படைத்தார். பின்னர், சீடரிடமும், எம் ஒவ்வொருவரிடமும் அவர் “இவரே உம் தாய்” (வச. 27) என்றார். அன்னையே, இப்போது நாங்கள் உம்மை எம் வாழ்விலும் உலகிலும் வரவேற்க விரும்புகிறோம். சோர்வடைந்தும் கலக்கமடைந்தும் இருக்கும் மனித சமுதாயம் உம்மோடு சிலுவையடியில் நிற்கின்றது. அது உம்மிடம் தன்னை கையளிக்கவேண்டும், உம் வழியாக கிறிஸ்துவிடம் தன்னை அது அர்ப்பணிக்கவேண்டும். உமது தூய இதயம், உக்ரேனிய மற்றும் இரஷ்ய மக்களுக்காகவும், போர், பசி, அநீதி மற்றும் கடுந்துயர் ஆகியவற்றால் துன்புறும் அனைத்து மக்களுக்காகவும் துடிக்கின்றது. இவ்வேளையில் உம்மை அன்போடு வணங்குகின்ற, உக்ரேனிய மற்றும் இரஷ்ய மக்கள் உம்மிடம் வேண்டுகின்றனர்.    

எனவே இறைவனின் அன்னையே, நாங்கள் எம்மையும், திருஅவையையும் மனித சமுதாயம் அனைத்தையும், குறிப்பாக, இரஷ்யா மற்றும் உக்ரேனை, உமது களங்கமற்ற அமல இதயத்திடம் ஒப்படைக்கின்றோம், அதற்கு அர்ப்பணிக்கின்றோம். நம்பிக்கை மற்றும் அன்போடு நாங்கள் ஆற்றும் இந்த எம் அர்ப்பணத்தை ஏற்றருளும். போரை முடிவடையச் செய்யும். உலகிற்கு அமைதியை வழங்கும். உம் இதயத்திலிருந்து வெடித்துச் சிதறும் 'ஆகட்டும்' என்பது, வரலாற்றின் கதவுகளை அமைதியின் இளவரசருக்குத் திறக்கின்றது. உமது இதயத்தின் வழியாக அமைதி வரும் என நம்புகிறோம். முழு மனிதக் குடும்பத்தின் வருங்காலம், மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள், உலகின் ஏக்கங்கள், மற்றும் நம்பிக்கைகள் ஆகிய அனைத்தையும் அன்னையே உமக்கு அர்ப்பணிக்கின்றோம்.   

உம் வழியாக இறை இரக்கம் இப்பூமியின் மீது பொழியப்படுவதாக. அமைதியின் இனிமையான துடிப்பு மீண்டும் எம் நாள்களைக் குறிப்பதாக. தூய ஆவியார் இறங்கிவந்த  ஆகட்டும் என்றுரைத்த பெண், நம் மத்தியில் கடவுளின் நல்லிணக்கத்தைக் கொணர்வாராக. அவர், நம் இதயங்களின் வறட்சியை அகற்றுவாராக. நம்பிக்கையின் வற்றாத ஊற்றே மரியே, நீர் மனித குலத்தை இயேசுவிடம் கொணர்ந்தீர். எம்மை ஒன்றிப்பின் கைவினைஞர்களாக ஆக்கியருளும். எம் பாதைகளில் நீர் நடந்து வருகின்றீர். அமைதியின் பாதைகளில் எம்மை வழிநடத்தும். ஆமென்.